யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு புதுக்கட்டணம்!
16 புரட்டாசி 2026 புதன் 08:41 | பார்வைகள் : 168
யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு புதிய கட்டண விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர்களுக்கு இடையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யுபிஐ வாயிலாக நடைபெறும் பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய விதிமுறைகள், தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தனிநபர்களுக்கு இடையே எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றாலும், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
சிறு வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கும் எந்த கட்டணமும் இல்லை. இதனால், தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு நடைபெறும் 96 சதவீத பணப்பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் பொருந்தும்.
இந்த கட்டணம் அரசோ அல்லது யுபிஐயை செயல்படுத்தும் என்பிசிஐயோ விதிக்கும் வரி கிடையாது.
### யாருக்கெல்லாம் இலவசம்?
தனிநபர்களுக்கு இடையே நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை. எவ்வளவு பணப்பரிவர்த்தனை நடைபெற்றாலும் கட்டணம் வசூலிக்கப்படாது. யுபிஐ வாயிலாக பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் எந்த கட்டணமும் இல்லை.
இதன் மூலம், மொத்த பணப்பரிவர்த்தனைகளில் யுபிஐ வாயிலாக நடைபெறும் 70 சதவீத பரிவர்த்தனைகள் கட்டணம் இல்லாமல் நடைபெறும்.
### ரூ.2 ஆயிரம் வரை
தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு நடைபெறும் ரூ.2 ஆயிரம் வரையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
### சிறு வணிகர்கள்
கியூஆர் கோடு வாயிலாக மாதம் ரூ.1 லட்சம் வரை பணம் பெறும் தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட சாலையோர சிறு வணிகர்களுக்கும் எந்த கட்டணமும் இல்லை.
### யாருக்கு கட்டணம்?
தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் கட்டணம், யுபிஐ சேவையில் உள்ள வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்படும்.
ரூ.75 ஆயிரம் அல்லது அதற்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் விவசாய உற்பத்தி துறைகளில் நடைபெறும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.
மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை புரோக்கர்கள் மற்றும் டீலர்களுக்கு 0.02 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
### பயனர்களிடம் வசூலிக்கக்கூடாது
இந்த கட்டணம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படும் கட்டணம் அல்ல. இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வர்த்தகர்கள் மாற்றிவிடாமல் இருப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், யுபிஐ சேவை வழங்குநர்களும் மறைமுகமாக எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



