காற்றாலை உற்பத்தி குறைவால் மின் பற்றாக்குறை: அமைச்சர்

காற்றாலை உற்பத்தி குறைவால் மின் பற்றாக்குறை: அமைச்சர்

16 புரட்டாசி 2026 புதன் 09:47 | பார்வைகள் : 167


காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால், மின்சார சந்தையில் இருந்து 3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை ரூ.20-க்கும் அதிகமாக உள்ளது என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழக மின் வினியோகம் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில், உயரதிகாரிகளுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே காரணம். செப்டம்பர் மாதத்தில் காற்றின் வேகம் குறைவதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைகிறது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் தமிழகத்தின் மின் தேவை 16,000 மெகாவாட்டாக இருந்தது. தற்போது அது 19,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

இதையடுத்து, கடந்த வாரம் வெளிச்சந்தையில் இருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இன்றும் காற்றாலை மின் உற்பத்தி மேலும் குறைந்துள்ளதால், கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது.

மற்ற மாநிலங்களில் மின்சார சந்தையில் விலை அதிகமாக இருப்பதால், அங்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படவில்லை. மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு, மின் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது 3,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விலை ரூ.20-க்கும் மேல் உள்ளது.

அக்டோபர் மாதம் முதல் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க