பயன்பாடற்ற பொருட்களை விற்பதால் மத்திய அரசுக்கு ரூ.5,100 கோடி வருவாய்

பயன்பாடற்ற பொருட்களை விற்பதால் மத்திய அரசுக்கு ரூ.5,100 கோடி வருவாய்

16 புரட்டாசி 2026 புதன் 10:50 | பார்வைகள் : 173


நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கழிவுப் பொருட்களை கண்டறிந்து விற்பனை செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.5,100 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த பழைய கோப்புகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்களால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் 'தூய்மை மிஷன் 2.0' திட்டத்தின் கீழ், மத்திய அரசு அலுவலகங்களில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை சேகரித்து, மறுசுழற்சி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, அரசு அலுவலகங்களில் உள்ள பயன்பாடற்ற பொருட்களை கண்டறிந்து விற்பனை செய்ததன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.5,102.91 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் 24.20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இந்த இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், 180.48 லட்சத்துக்கும் அதிகமான பழைய மற்றும் தேவையற்ற கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல லட்சம் சதுரஅடி அலுவலக இடம் மீட்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த 5ம் கட்ட தூய்மை இயக்கத்தில் மட்டும் 11.6 லட்சம் இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, 29.52 லட்சம் கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 233.75 லட்சம் சதுரஅடி இடம் பயன்பாட்டுக்கு கிடைத்துள்ளது. மேலும், ரூ.833.92 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

### 6ம் கட்ட சிறப்பு இயக்கம்

6ம் கட்ட சிறப்பு தூய்மை இயக்கம் வரும் அக்., 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நாளை தொடங்கி, இம்மாத இறுதி வரை மேற்கொள்ளப்பட உள்ளன.

தூய்மை பணிகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான இணையதளத்தை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.

மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்த தூய்மை இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட உள்ளது.
 

தொடர்ந்து படிக்க