இலாகா மாற்ற அழுத்தமா? அமைச்சர் பதில்
16 புரட்டாசி 2026 புதன் 11:52 | பார்வைகள் : 180
நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் கொடுக்கத்தான் செய்வார்கள். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம் என, மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில்முனைவோருடன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜ் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷும் உடனிருந்தார்.
கலந்துரையாடலுக்குப் பின் அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதுக்கடைகளில் தவறு செய்தால் சஸ்பெண்ட் செய்வது உறுதி. இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. இந்த அரசு தவறுகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.
சில இடங்களில் வீடியோ எடுத்து மிரட்டுவதாக ஊழியர்கள் தரப்பிலும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே, கூறப்படும் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுப்பது உறுதி.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
அப்போது அவரிடம், 'சில மது தொழிற்சாலை உரிமையாளர்கள், உங்கள் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, உங்களது இலாகாவை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறதே?' என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், "அது உண்மையா என தெரியவில்லை. நல்லது செய்தால் சும்மா இருப்போர் அழுத்தம் தான் தருவர். அவர்களால் முடிந்ததை செய்யட்டும்; பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.



