தந்திரம் செய்து ஏமாற்றும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
16 புரட்டாசி 2026 புதன் 13:58 | பார்வைகள் : 185
பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்துவதாக அறிவித்து, பாகிஸ்தான் தந்திரமாக செயல்பட்டு அனைவரையும் ஏமாற்ற முயற்சிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.24 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
**இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:**
பாகிஸ்தான் இதுபோன்ற தந்திரங்களையும், மக்களை ஏமாற்றும் முயற்சிகளையும் மேற்கொள்வது புதிதல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை பார்த்திருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடு வெளியிடும் இதுபோன்ற அறிவிப்புகள் அனைத்தும் போலியானவை என்பது அனைவருக்கும் தெரியும்.
எந்த பலனும் இல்லாத அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
**கண்டனம்**
ரந்தீர் ஜெயிஸ்வால் மேலும் சில கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது:
மலேசியாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அழைத்து வரும் விவகாரம் தொடர்பாக, அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஹவுதி பயங்கரவாதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்தில் சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சவுதியின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிக்கிறோம்.
இதுபோன்ற தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிப்பதுடன், சுதந்திரமான கடல் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்தப் பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும்.
**ரஷ்ய உறவு**
இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு முக்கியமான தூணாக உள்ளது. அணுசக்தி மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளும் நீண்ட காலமாக ஒத்துழைத்து வருகின்றன.
கூடங்குளம் திட்டம், எரிசக்தித் துறையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பின் வெற்றிகரமான எடுத்துக்காட்டாகும். ரஷ்யாவுடனான இந்த எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் விரும்புகிறோம்.
இவ்வாறு ரந்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.



