புதிய தலைமை செயலகம் அவசியம்; பட்டினப்பாக்கம் தவறு: அன்புமணி
17 புரட்டாசி 2026 வியாழன் 07:47 | பார்வைகள் : 205
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“தமிழக அரசு புதிதாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அவசியமானது. இதில் மாற்றுக் கருத்து கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான்.
ஆனால், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டுவது என்பது மிகவும் தவறான முடிவு. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான காரணம், அந்த பகுதி குறுகியதாக இருப்பதுதான். அங்கு போக்குவரத்து நெரிசலும் மிக அதிகமாக உள்ளது.
அந்த பகுதியில் பல கல்வி நிலையங்கள், பல கல்லூரிகள், சாந்தோம் தேவாலயம், பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் ஆகியவை உள்ளன. மேலும், அங்கு குறுகிய சாலைகளே உள்ளன.
எதிர்காலத்தில் அங்கு தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் அங்கு வருவார்கள். அப்போது அங்கு செல்வதற்கே இடம் இருக்காது. போக்குவரத்து நெரிசல் மிகவும் மோசமாக இருக்கும்.”
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.



