ஒரு யூனிட் 30 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிய வாரியம்!
17 புரட்டாசி 2026 வியாழன் 09:53 | பார்வைகள் : 179
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.25 முதல் ரூ.30 வரை விலைக்கு மின் வாரியம் கொள்முதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் தினசரி மின் தேவை சராசரியாக 21,000 மெகாவாட்டாக இருந்தது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டது.
பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்ததால், மின்சார சந்தையில் விலை மிகவும் உயர்ந்திருந்தது. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் தமிழக மின் வாரிய அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
மின் பற்றாக்குறையை சமாளிக்க, இம்மாதத்தின் இரண்டாவது வாரம் முதல் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் கடந்த வார இறுதி முதல் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை ரூ.20-க்கு மேல் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், மாலை 6 மணி முதல் இரவு வரையிலான உச்ச நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்தபோது, அதன் விலை ரூ.25 முதல் ரூ.30 வரை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
**மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:**
மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு, கடந்த ஆட்சிகளில் அதிகளவில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததே முக்கிய காரணம். இந்த அரசு வெளிப்படையான அரசு என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, மின் பற்றாக்குறையை சமாளிக்க எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மெகாவாட் மின்சாரம், என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



