வேலுமணி வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கெடு
17 புரட்டாசி 2026 வியாழன் 10:55 | பார்வைகள் : 181
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலை பணிகளை மேற்கொள்ள, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பு செயலர் சுஷீல்குமார் படேல் ஆஜரானார்.
அவரிடம், “ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க ஏன் இவ்வளவு காலதாமதம்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
**சுஷீல்குமார் படேல் அளித்த பதில்:**
வழக்கு தொடர்பான ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது. அந்த ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அனுப்பப்பட்டுள்ளன. ஆணையத்தின் பதில் அடுத்த வார இறுதியில் கிடைக்கும்.
அதன்பின், அந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கு தொடர்வதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்கே உள்ளது.
இந்த நடைமுறைகள் முடிவடைய இரண்டு மாதங்கள் ஆகும். அதன்பின் காலதாமதம் ஏதும் ஏற்படாது. இந்த விவகாரத்தில் அனுமதி வழங்கும் நடைமுறையை முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “இந்த விவகாரத்தில் 2025 நவம்பர் முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை விளக்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை முடித்து, அந்த முடிவை தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.



