இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாக். கப்பலுக்கு சேதம்
17 புரட்டாசி 2026 வியாழன் 12:01 | பார்வைகள் : 959
அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர்க்கப்பல் மீது, பாகிஸ்தான் போர்க்கப்பல் அதிவேகமாக வந்து மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான இந்த நகர்வால் இந்திய போர்க்கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதேவேளை, இந்திய போர்க்கப்பலுடன் மோதிய பாகிஸ்தான் போர்க்கப்பல் பெரும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே அரபிக் கடல் பகுதியில், பாரசீக வளைகுடா நுழைவுப் பகுதிக்கு அருகில் குவாதர் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 15-ம் தேதி மாலை பாகிஸ்தான் கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நாட்டின் போர் ஒத்திகையை சர்வதேச கடற்பரப்பில் இருந்தபடி, இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள் கண்காணித்துக் கொண்டிருந்தன. அப்போது பாகிஸ்தான் கடற்படையின் சிறிய ரக போர்க்கப்பலான பி.என்.எஸ். ஹுனைன், இந்திய போர்க்கப்பலை நோக்கி அதிவேகமாக முன்னேறி வந்து மோத முயன்றது.
இந்த ஆபத்தான நகர்வின்போது பாகிஸ்தான் போர்க்கப்பல் இந்திய போர்க்கப்பல் மீது மோதியது. இதில் இந்திய போர்க்கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரத்தில், யார்முக் வகையைச் சேர்ந்த பல்நோக்கு போர்க்கப்பலான பாகிஸ்தானின் பி.என்.எஸ். ஹுனைன் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பழுதுபார்க்கும் பணிக்காக அந்த கப்பல் போர் பயிற்சி நடைபெற்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, கராச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த அத்துமீறல் தொடர்பாக, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை நேரில் அழைத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், 1991-ம் ஆண்டு கையெழுத்தான இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவப் பயிற்சி ஒப்பந்த விதிகளை பாகிஸ்தான் மீறியுள்ளதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது.



