மது, கனிமங்கள் விற்பனை: தமிழக அரசுக்கு ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய்
17 புரட்டாசி 2026 வியாழன் 13:04 | பார்வைகள் : 564
மது மற்றும் கனிமங்கள் விற்பனையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், கடந்த நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், தவெக அரசு அமைந்த பிறகு, மதுபான விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, 'டாஸ்மாக்' நிறுவனம் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு மது வகை, பீர் மற்றும் ஒயின் பெட்டிக்கும், மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் முறையே ரூ.90, ரூ.40, ரூ.20 என சிறப்பு கட்டணம் வசூலிக்க ஜூன் மாதம் உத்தரவிடப்பட்டது.
மேலும், தனியார் 'கிளப்'களில் உள்ள மதுக்கூடங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டது. கனிமங்கள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மது மற்றும் கனிமங்கள் விற்பனை மூலம் அரசுக்கு வர வேண்டிய வருவாய், தனியாருக்கு சென்றதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களாக ஒவ்வொரு துறையிலும் அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுமையாக அரசு கஜானாவுக்கு வந்து சேருவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம், கடந்த நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதில், மதுபானங்கள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
அனைத்து துறைகளிலும், இந்த முழு ஆண்டில் ரூ.20,000 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



