பல வகை வைரஸ் காய்ச்சல்: பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

பல வகை வைரஸ் காய்ச்சல்: பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

17 புரட்டாசி 2026 வியாழன் 14:07 | பார்வைகள் : 333


பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் 'இன்ப்ளுயன்சா ஏ' வகை காய்ச்சல், அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி. எனப்படும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ், கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் வைரஸ் உள்ளிட்டவை அதிகளவில் பரவி வருகின்றன.

அதேபோல், குழந்தைகளுக்கு கை, கால், வாய் காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைப்பொழிவு காரணமாக டெங்கு பாதிப்பும் பரவலாக உள்ளது. பல்வேறு வகையான காய்ச்சல்களால் தற்போது 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட சற்று அதிகமாக உள்ளது. இதனால், பலருக்கு கடுமையான தலைவலி, தொண்டை வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

தற்போது பரவி வரும் காய்ச்சல் பலருக்கு ஒரு வாரத்தில் குணமடைந்தாலும், இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணியர், முதியோர், குழந்தைகள் போன்றோருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வைரஸ் பாதிப்புகள் அறிவிப்பு செய்யப்படாத காய்ச்சல் என்பதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

வகுப்பறையில் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.

சில பள்ளிகள், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தொடர்ந்து படிக்க