Saint-Denis நகரில் முதல் கட்டமாக சுமார் 1,000 இலவச மிதிவண்டிகள்!!
16 புரட்டாசி 2026 புதன் 23:07 | பார்வைகள் : 1672
Saint-Denis நகரில் 15 வயதுடைய இளைஞர்களுக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி மிதிவண்டிகளுடன் பாதுகாப்புத் தலைக்கவசம் மற்றும் திருட்டுத் தடுப்பு பூட்டு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. நகர நிர்வாகம் மொத்தம் 1,000 மிதிவண்டிகளை கொள்வனவு செய்துள்ள நிலையில், முதல் கட்ட விநியோகத்துக்கு முன்னதாகவே 380 மிதிவண்டிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
Stade de France இன் இணை மைதானத்தில் நடைபெற்ற முதல் விநியோக நிகழ்வில் Saint-Denis நகர மேயர் Bally Bagayoko கலந்துகொண்டு இளைஞர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். LFI கட்சியின் Bally Bagayoko தலைமையிலான பட்டியலின் தேர்தல் பிரசாரத்தின்போது முன்வைக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த இலவச மிதிவண்டிகள் திட்டம் இடம்பெற்றிருந்தது. 3e வகுப்பில் கல்வி கற்கும் மற்றும் 15 வயதை அடைந்த இளைஞர்களை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
முதல் மிதிவண்டிகளைப் பெற்ற 15 வயதான Samuel, புதிய மிதிவண்டிகள் இலகுவாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்தார். அவரது தாயார் Maï, இத்திட்டம் இளைஞர்களின் போக்குவரத்துக்கு உதவியாக இருக்கும் என பாராட்டினார். குறிப்பாக Blanc-Mesnil பகுதியில் உள்ள தொழில்முறை உயர்நிலைப் பள்ளியில் Samuel கல்வி கற்பதால், பேருந்து அல்லது RER சேவையில் இடையூறு ஏற்பட்டால் மிதிவண்டியை மாற்று போக்குவரத்து வழியாகப் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். பொதுப் போக்குவரத்தில் சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் பயணத்தை மிதிவண்டி மூலம் சுமார் 20 நிமிடங்கள் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



