சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ
17 புரட்டாசி 2026 வியாழன் 12:50 | பார்வைகள் : 297
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் அந்நாட்டின் முன்னணி மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
'சிரிலிய சவிய அறக்கட்டளையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவரது இந்தத் திடீர் வெளிநாட்டுப் பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட கையோடு நேரடியாகப் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அவர் வெளிநாடு செல்ல முயல்வதை அறிந்த நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், உடனடியாக விமான நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணைக்கான அழைப்பாணையை நினைவுறுத்தினர். முன்னதாக இந்த அழைப்பாணை தங்காலை, கார்ல்டன் இல்லத்தில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள், செப்டம்பர் 24 ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராக வேண்டும் என்ற அறிவித்தலை அவரிடம் வழங்கினர். அந்த அறிவித்தல் கடிதத்தை அவரது உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், "விமானப் புறப்பாட்டு வாயிலுக்கு அருகே வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் மூலம் இந்த அறிவித்தல் கடிதம் ஷிராந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று கூறினார்.
மேலும், ஷிராந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என்றும், திட்டமிட்டபடி செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணை அதிகாரிகளின் முன் ஆஜராவார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.



