ஆசிய விளையாட்டு விழா மகளிர் கிரிக்கெட் - அரை இறுதிகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான்

ஆசிய விளையாட்டு விழா மகளிர் கிரிக்கெட் - அரை இறுதிகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான்

17 புரட்டாசி 2026 வியாழன் 17:05 | பார்வைகள் : 186


ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு பங்களாதேஷும் பாகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன.

நிஷின் கோரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பங்களாதேஷுக்கும் சீனாவுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டது.

எனினும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு பங்களாதேஷுக்கு நேரடியாக அரை இறுதியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் 2 பந்துகள் மீதம் இருக்க பாகிஸ்தான் 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியையீட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

மழையினால் தாமதித்து ஆரம்பமான  இப் போட்டி அணிக்கு 11 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தாய்லாந்து 11 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவரான நன்னபத் கோன்ச்சாரொயென்கி 49 ஓட்டங்களைப் பெற்றார்.

ஃபன்னிட்டா மாயா 15 ஓட்டங்களுடன் சுயமாக ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவி நரேமொல் சய்வாய் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 10.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷவ்வல் ஸுல்பிகார் 25 ஓட்டங்களையும் பாத்திமா சானா 21 ஓட்டங்களையும் குல் ஃபெரோஸா 16 ஓட்டங்களையும் டுபா ஹசன் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒன்னிச்சா கம்ச்சொம்ப்பு 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுனிதா சட்டுரொங்கரட்டன 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆசிய விளையாட்டு விழா ரி20 கிரிக்கெட்டில் பங்குபற்றுவதற்காக  பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட்  அணியுடன் சென்றிருந்த முனீபா அலி அங்கிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவரது தாயாருக்கு கடும் சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

முனீபா அலிக்கு பதிலாக மாற்று வீராங்கனை நியமிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக குல் ஃபேரோஸா விளையாடிவருகிறார்.

 

 

தொடர்ந்து படிக்க