புதிய தலைமை செயலகம்: மீனவ அமைப்பினருடன் விஜய் ஆலோசனை
18 புரட்டாசி 2026 வெள்ளி 09:28 | பார்வைகள் : 233
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக, மீனவர் அமைப்புகளை சந்தித்து முதல்வர் விஜய் கருத்து கேட்க உள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வீட்டுவசதி, வருவாய்த் துறைகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், த.வெ.க., கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்னும் ஓரிரு நாட்களில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும், முதல்வர் விஜய் தலைமையில் மீனவர் அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன்பிறகு புதிய தலைமைச் செயலகம் திட்டம் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.



