சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு: நோயல் டாடா எதிர்ப்பு

சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு: நோயல் டாடா எதிர்ப்பு

18 புரட்டாசி 2026 வெள்ளி 12:38 | பார்வைகள் : 209


டாடா சன்ஸ் தலைவராக உள்ள சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க, வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் உள்ளார். 63 வயதாகும் அவர், டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதில் 10 ஆண்டுகளாக தலைவராகவும் உள்ளார். அவரது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப். 20ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை என அவர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய தலைவரைத் தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் இப்பதவியில் தொடர்வதற்கு மும்பையில் நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

**டாடா சன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:**

செப். 17 அன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரை மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவராக மீண்டும் நியமிக்க டாடா சன்ஸ் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எதிர்ப்பு**

அதேநேரத்தில், சந்திரசேகரனை மீண்டும் நியமிப்பதற்கு டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

**டாடா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:**

அறக்கட்டளை நியமித்த இயக்குனர்களில் ஒருவரான நோயல் டாடா, வாரியக் கூட்டத்தில் சந்திரசேகரன் நியமனத்திற்கு எதிராக அளித்த வாக்கு எந்தவித அடிப்படையும் இன்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப். 2027க்கு பிறகு பதவியில் தொடர விரும்பவில்லை என்ற சந்திரசேகரனின் முடிவும், அதை ஏற்றுக்கொண்டதும் இறுதியானது. அறக்கட்டளையின் முடிவு மாறாதது. சந்திரசேகரனை மீண்டும் நியமிப்பது சட்டவிரோதமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை டாடா அறக்கட்டளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்ந்து படிக்க