நவோதயா பள்ளிகள்: தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

நவோதயா பள்ளிகள்: தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி

18 புரட்டாசி 2026 வெள்ளி 14:44 | பார்வைகள் : 254


நவோதயா பள்ளிகளை அமைப்பதைத் தடுக்க வேண்டுமா? என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, இன்று (செப். 17) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தனது வாதங்களை முன்வைத்தார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உத்தரவிடக் கூடாது. தமிழகத்தில் போதுமான அரசு பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் ஹிந்தி பயில எந்தத் தடையும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கல்விக் கொள்கை உள்ளது. நவோதயா பள்ளிகளின் கல்வி நடைமுறை தமிழகத்தின் கல்விக் கொள்கைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் நாடு; ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. இது நிலைப்பாடு சார்ந்த பிரச்னை அல்ல; அரசின் கொள்கை சார்ந்த விவகாரம். ஹிந்தி திணிப்பு மட்டும் காரணம் அல்ல; நிதி சார்ந்த பிரச்னைகளும் உள்ளன. மத்திய அரசு ரூ.5,000 கோடிக்கும் மேல் வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

**நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:**

* நவோதயா பள்ளிகளை அமைப்பதைத் தடுப்பதா? தமிழக அரசு தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது.

* நவோதயா பள்ளிகள் அமைக்கும் திட்டம் மாநிலத்தின் கொள்கைக்கு எதிரானது அல்ல. மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசும் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

* நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான நிலங்களை கண்டறிய தமிழக அரசுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலங்களை கண்டறிய வேண்டும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும்.

* அரசு மாறியுள்ளதால், மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

* இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளது. ஹிந்தி திணிப்பு மட்டுமே நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமா?

* நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வர வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தொடர்ந்து படிக்க