Eiffel Tower பகுதியில் ட்ரோன் கண்காணிப்புக்கு தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Eiffel Tower பகுதியில் ட்ரோன் கண்காணிப்புக்கு தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

18 புரட்டாசி 2026 வெள்ளி 17:07 | பார்வைகள் : 931


Champ-de-Mars மற்றும் Eiffel Tower பகுதிகளில் சாலையோர சட்டவிரோத விற்பனையை கட்டுப்படுத்த ட்ரோன்களை பயன்படுத்த பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை இரண்டு ட்ரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை Vigie Liberté என்ற சங்கம் எதிர்த்து நிர்வாக நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த பரிஸ் நிர்வாக நீதிமன்றம், சாலையோர விற்பனையை தடுப்பதற்காக ட்ரோன்களை பயன்படுத்த அனுமதித்த காவல்துறை தலைமை அதிகாரியின் உத்தரவை இடைநிறுத்தியுள்ளது. போலி பொருட்கள் மற்றும் தரம் குறைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சட்டபூர்வமாக இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் காவல்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.மேலும், அப்பகுதியின் நில அமைப்பு காரணமாக தரை வழியாக மட்டும் பாதுகாப்புப் படையினரால் போதுமான கண்காணிப்பை மேற்கொள்ள முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த காரணங்கள் ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு போதுமானவை அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியுரிமைக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கண்காணிப்பு கமெராக்கள் போன்ற மாற்று வழிகளை பயன்படுத்த முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

Eiffel Tower சுற்றுவட்டாரத்தில் நினைவுப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் அதிகாரிகள் பல ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக Champ-de-Mars பகுதியில் சாலையோர விற்பனையாளர்களை அகற்ற “Zéro délinquance” திட்டத்தையும் முன்னெடுத்திருந்தார். இருப்பினும், அதிகளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இந்த பகுதியில் சட்டவிரோத சாலையோர விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து படிக்க