மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்
19 புரட்டாசி 2026 சனி 06:15 | பார்வைகள் : 278
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால், 5 முனைப் போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்கள்
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து, வருகிற 20-ந்தேதிக்கு பிறகு, அதாவது அடுத்த வாரம் முதல், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாட்கள் பிரசாரம்
இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாத இறுதியிலும், அடுத்த மாத தொடக்கத்திலும் ஒரு தொகுதிக்கு தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் வகையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால், முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசாரம் தங்களுக்கு கை கொடுக்கும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது முதல்-அமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு, முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால், இதற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் இரு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தலா 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.
களை கட்டும் தேர்தல் களம்
இவ்வாறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.



