ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: அன்பில் மகேசிடம் 7 மணி நேரம் விசாரணை
19 புரட்டாசி 2026 சனி 06:32 | பார்வைகள் : 1058
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய 7 மணி நேரத்திற்கும் மேலான விசாரணை நிறைவு பெற்றது.
சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
### திருமண மண்டபத்தில் வைத்து பணம் வசூல்
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தி.மு.க. பிரமுகரான பி.டி. அரசகுமார் மற்றும் அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பி.டி. அரசகுமார், தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியிலும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் சந்தித்து பணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 177 பேர் புகார் அளித்துள்ளனர். மேலும், 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
### அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்குப்பதிவு
இந்த வழக்கு தற்போது லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் திருச்சியில் 9 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் 8 பென்டிரைவ்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
### விசாரணை நிறைவு
சோதனை முடிவில், 18-ந்தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கிச் சென்றனர்.
போலீசாரின் சம்மனின்படி, வழக்கு விசாரணைக்காக சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆஜரானார்.
அவரிடம் காலை 11 மணியளவில் தொடங்கிய விசாரணை, மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. விசாரணையின்போது வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.



