நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி

நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி

19 புரட்டாசி 2026 சனி 07:39 | பார்வைகள் : 688


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய அவரது குடும்பத்தினர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்வதும், மாற்றுத்திறனாளி என்பதைக் கூட பொருட்படுத்தாமல் அவரது உறவினரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

### மாணவன் மரணத்தில் நடந்தது என்ன?

மாணவன் உயிரிழந்து 12 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், குற்றவாளிகளை கண்டறிவதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும், வழக்குப்பதிவு செய்வதிலும் மட்டுமே காவல்துறை கவனம் செலுத்தி வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவனின் மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன, அவர் கொலை செய்யப்பட்டாரா, அதற்குக் காரணமானவர்கள் யார் என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

### சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

குறிப்பாக, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற்று, அவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தனது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்ந்து படிக்க