இந்தியாவில் 2027ல் அறிமுகமாகும் முதல் டெங்கு தடுப்பூசி

இந்தியாவில் 2027ல் அறிமுகமாகும் முதல் டெங்கு தடுப்பூசி

19 புரட்டாசி 2026 சனி 08:44 | பார்வைகள் : 203


நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசி 2027ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனினும், இந்த தடுப்பூசியின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் மற்றும் டகேடா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ‘க்யூடெங்கா’ (Qdenga) என்ற பெயரில் நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக டகேடா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகேந்தர் நாயக் கூறியதாவது:

“ஜூலை மாதத்தில் தடுப்பூசியை சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. வணிக ரீதியிலான விநியோகத்தைத் தொடங்குவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய மற்ற நடைமுறைகளை நிறைவு செய்வதே தற்போது எங்களின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது.

தற்போதைய நிலையில், தடுப்பூசியின் விலை குறித்து ஊகிப்பது அவசரமானதாக இருக்கும். இந்தியாவின் நோய்த்தடுப்புத் திட்டத்தில் இந்த தடுப்பூசியை சேர்ப்பது நீண்டகால இலக்காகும்” என்று அவர் கூறினார்.

4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்குப் பயன்படுத்துவதற்காக, மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து க்யூடெங்கா தடுப்பூசியை சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை இந்தியா 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கியது.

இந்த தடுப்பூசி 3 மாத இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட வேண்டும்.
 

தொடர்ந்து படிக்க