மம்தா அணிக்கு புதிய கட்சி பெயர் அறிவிப்பு

மம்தா அணிக்கு புதிய கட்சி பெயர் அறிவிப்பு

19 புரட்டாசி 2026 சனி 09:57 | பார்வைகள் : 207


மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் ‘கால்பந்து வீரர்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மேலும், அந்த அணி இனி ‘மம்தா அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ்’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்தது. மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும், அருப் ராய் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.

அதிருப்தி அணியைச் சேர்ந்த ரிதப்ரதா பானர்ஜிக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதற்கிடையே, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘இரட்டைப் பூக்கள்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இரு அணிகளும் புதிய பெயர் மற்றும் சின்னங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கும் தனித்தனியாக புதிய கட்சி பெயர்கள் மற்றும் தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதன்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘கால்பந்து வீரர்’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அருப் ராய் தலைமையிலான அணிக்கு ‘ஜனநாயக திரிணமுல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ‘அஞ்சல் உறை’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் புதிய பெயர் மற்றும் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும் என இரு தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.

### இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு

இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா தரப்பில் சஞ்சிதா தேவி பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று அவர் முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசினார். அதன்பின்னர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலிலும், அசாமில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாட்டின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க