காவிரியில் 16.01 டி.எம்.சி., நீரை திறக்க கோரி தமிழக அரசு அவசர மனு
19 புரட்டாசி 2026 சனி 10:06 | பார்வைகள் : 180
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 16.01 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா முறையாக திறந்துவிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையிலும், நீரை திறந்துவிடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாகவும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
### தமிழக அரசு தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது:
* காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றுவதில்லை.
* ஒவ்வொரு முறையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் போதும் அல்லது வழக்கு விசாரணைக்கு வரும்போதும், ஏதேனும் ஒரு காரணத்தை கூறி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல், நிலுவையில் வைப்பதை கர்நாடகா வழக்கமாகக் கொண்டுள்ளது.
* கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதிய நீர்வரத்து இருக்கும் நிலையிலேயே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
* உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தத் தவறிய கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடக அணைகளில் மொத்த நீர் இருப்பு 61.94 டி.எம்.சி.யாக உள்ளது. ஆனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அணைகளின் நீர்வரத்து 50 சதவீதம் பற்றாக்குறையாக இருப்பதாக கர்நாடகா தெரிவித்துள்ளது.
* தமிழகத்திற்கான நீர் பற்றாக்குறை 60.23 டி.எம்.சி.யாக உள்ளது. இந்த உண்மை தரவுகளை முழுமையாக ஆய்வு செய்யாமல், தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நீரின் அளவு, விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய அளவைவிட மிகவும் குறைவாக உள்ளது.
* தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. பற்றாக்குறை நீரை பெற்றுத்தர காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதியை நம்பி 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனப் பரப்பாக உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
* கடந்த 1ஆம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது அணையில் மிகக் குறைந்த அளவு நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இந்த நீர் அடுத்த 25 முதல் 30 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும்.
* போதிய நீர் கிடைக்காததால் சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் விவசாய பொருளாதாரத்திலும் கடுமையான பேரழிவு ஏற்படும்.
* ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நிலுவை நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
* காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா தவறாமல் பின்பற்றுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
* கடந்த 8ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும்.
* தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவை நீரை ஈடுசெய்யும் வகையிலும், பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு விகிதாசார அடிப்படையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வலுவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.



