சர்வதேச விதிகளை மீறிய பாகிஸ்தான் செயல்: இந்தியா கண்டனம்
19 புரட்டாசி 2026 சனி 12:20 | பார்வைகள் : 231
கடலில் மோதல்களைத் தடுப்பதற்கான சர்வதேச விதிகளையும் பாகிஸ்தான் போர்க்கப்பல் மீறியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி அரபிக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர்க்கப்பல் மீது, பாகிஸ்தான் போர்க்கப்பல் அதிவேகமாக மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நகர்வால் இந்திய போர்க்கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அதேநேரத்தில், இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் உயர் அதிகாரியை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“இந்த விவகாரத்தில் நாம் தெரிவித்த எதிர்ப்புக்கு பாகிஸ்தான் அளித்த பதிலைப் பார்த்துள்ளோம். நாம் எதிர்பார்த்ததைப் போலவே, பழைய காலந்தாழ்த்தும் செயல்பாடுதான் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும், மறைமுக குறிப்புகளையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
மேற்கு அரபிக்கடலில் ஐஎன்எஸ் கோல்கத்தா வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, பாகிஸ்தான் கடற்படை கப்பலான பிஎன்எஸ் ஹூனைன் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற வகையில் செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
1991ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவப் பயிற்சி ஒப்பந்தத்தின் 10வது பிரிவை மீறும் வகையில், பாகிஸ்தான் போர்க்கப்பல் அபாயகரமான முறையில் முந்திச் செல்லும் வகையில் சூழ்ச்சி செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடலில் உள்ள இரு நாடுகளின் கடற்படை கப்பல்களும் ஒன்றுக்கொன்று மூன்று கடல் மைல்களுக்குள் வரக்கூடாது. மேலும், கடலில் மோதல்களைத் தடுப்பதற்கான சர்வதேச விதிகளையும் பாகிஸ்தான் கப்பல் மீறியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, பாகிஸ்தானின் அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும், இரு தரப்பினருக்கும் இடையேயான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளையும் மதிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தால் ஐஎன்எஸ் கோல்கத்தாவுக்கு பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. அது தொடர்ந்து கடலிலேயே உள்ளது” என தெரிவித்தார்.



