குழந்தைகள் பால் பவுடரில் விதிமீறல் ! நெஸ்லே இந்தியா சட்ட நடவடிக்கை

குழந்தைகள் பால் பவுடரில் விதிமீறல் ! நெஸ்லே இந்தியா சட்ட நடவடிக்கை

19 புரட்டாசி 2026 சனி 13:08 | பார்வைகள் : 641


குழந்தைகளுக்கான பால் பவுடர்களில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான பிரசாரங்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் அடிப்படையில், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் விளம்பர நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சர்க்கரை சேர்க்கை தொடர்பான புகார்

இந்நிலையில், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் 'நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1', 'லாக்டோஜென் புரோ 1' மற்றும் 'பாலோ அப் பார்முலா' ஆகிய மூன்று பால் பவுடர் தயாரிப்புகளை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வு செய்தது. மேலும், இப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

'நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1' பொருளின் விளம்பரத்தில், '5 எச்.எம்.ஓ.,க்கள்' மற்றும் 'வெய் புரோட்டீன்' தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. '5 எச்.எம்.ஓ.,க்கள்' என்பது குழந்தைகளுக்கான உணவில் இடம்பெறும் தாய்ப்பாலில் உள்ள சர்க்கரைச் சேர்க்கை தொடர்பான குறிப்பு ஆகும். 'வெய் புரோட்டீன்' என்பது பாலில் உள்ள ஒரு புரதக் கூறாகும்.

இந்தச் சேர்க்கை தொடர்பாக நெஸ்லே இந்தியாவிடம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விளக்கம் கேட்டது. விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த இந்தத் தகவல்கள், குழந்தைகளுக்கான உணவு தொடர்பான விதிமுறைகளுக்கு எதிரானவை என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.

அதேபோல், 'லாக்டோஜென் புரோ 1' பால் பவுடர் விளம்பரத்தில், 'வெய் புரோட்டீன்' எளிதில் செரிமானமாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்தும் நெஸ்லே நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஆய்வகப் பரிசோதனையில் விதிமீறல்

இணை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் 'பாலோ அப் பார்முலா' பால் பவுடர் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதில், 'பயோட்டின்' எனப்படும் வைட்டமின் பி7 சத்தின் அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு ஏற்ப இல்லை என கண்டறியப்பட்டது. மறுபரிசோதனையிலும் இதே முடிவு உறுதி செய்யப்பட்டது.

இந்த மூன்று பொருட்கள் தொடர்பாக, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்துக்கு எதிராக தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. இதில், இரண்டு வழக்குகள் விளம்பரங்களில் இடம்பெற்ற தகவல்கள் தொடர்பானவை. மற்றொரு வழக்கு, பயோட்டின் அளவு தொடர்பான ஆய்வகப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவை: நெஸ்லே நிறுவனம் விளக்கம்

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்துள்ள வழக்குகள் தொடர்பாக நெஸ்லே நிறுவனம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

'நான் எக்செல்லா புரோ' மற்றும் 'லாக்டோஜென் புரோ' ஆகிய குழந்தைகள் உணவுப் பொருட்களும், அவற்றின் லேபிள்களும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் நிபுணர் குழுவால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டவை. இவை நடைமுறையில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்கியுள்ளன.

லேபிள்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானவையே. அவை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் விரிவான விளக்கத்தை மீண்டும் அளித்துள்ளோம்.

அனைத்து சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் லேபிள் தகவல்கள் தொடர்பான விதிகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்போம்.

இவ்வாறு நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படிக்க