மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்!

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம்!

19 புரட்டாசி 2026 சனி 14:13 | பார்வைகள் : 1183


தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக, ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்வது, மின் வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நீதிமன்ற அதிகாரம் கொண்ட இந்த ஆணையம், தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.

ஆணையத்தில் பணியாற்றி வந்த இரு உறுப்பினர்களும் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் சட்ட உறுப்பினர் பதவியும், ஜூன் மாதம் முதல் மற்றொரு உறுப்பினர் பதவியும் காலியாக இருந்தன. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அரசு அறிவுறுத்தலின் அடிப்படையில், ஆணையத் தலைவராக இருந்த மணிவண்ணன், ஜூன் இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காலியாக உள்ள மூன்று பதவிகளுக்கும் புதியவர்களைத் தேர்வு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமைத்தது.

தேர்வுக் குழு, பலரிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, தேர்வுக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.

அதன் பின்னர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனும், உறுப்பினராக மாஸ்கர்னஸும், சட்ட உறுப்பினராக முத்து சாரதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் சென்னை கிண்டியில் உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ராதாகிருஷ்ணன், மின் வாரியத்தின் முன்னாள் தலைவராகவும், மாஸ்கர்னஸ் மின் பகிர்மான கழகத்தின் முன்னாள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். முத்து சாரதா, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆவார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளார். இம்மாத இறுதியில் அவர் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க