7 வயது சிறுவன் கத்தியால் குத்தியதில் அத்தை உயிரிழப்பு - Saint-Maur-des-Fossés பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!!

7 வயது சிறுவன் கத்தியால் குத்தியதில் அத்தை உயிரிழப்பு - Saint-Maur-des-Fossés பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!!

19 புரட்டாசி 2026 சனி 15:12 | பார்வைகள் : 1427


Saint-Maur-des-Fossés பகுதியில் வியாழக்கிழமை 17ஆம் திகதி இரவு முதல் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி அதிகாலை வரை இடம்பெற்ற குடும்பத் தகராறில் 7 வயது சிறுவன் தனது தாயை பாதுகாக்கும் முயற்சியில் அத்தையை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். அதிகாலை 4 மணிக்குப் பின்னர் 34 வயதுடைய சிறுவனின் தாயாருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே சிறிய விடயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாயாரை பாதுகாக்க குறுக்கிட்ட 7 வயது சிறுவன், தனது அத்தையின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் உதவி கோரி வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் சென்ற நிலையில், அவசர மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்த போதிலும் அவர் உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்ற கட்டிடத்தின் தரையிலும் சுவர்களிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் வந்தபோது சிறுவன் தனது தாயாருடன் கடும் அதிர்ச்சியில் இருந்ததாகவும், இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் எதிர்கொண்டவர்களுக்காக நகராட்சி உளவியல் ஆதரவு மையம் ஒன்றையும், சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையிலும் மற்றொரு உளவியல் ஆதரவு ஏற்பாட்டையும் நகரின் மேயர் மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து படிக்க