வட மாநில கட்சிகள் தி.மு.க., கூட்டணிக்கு நோ! உதயநிதி பேச்சால் அதிருப்தி

வட மாநில கட்சிகள் தி.மு.க., கூட்டணிக்கு நோ! உதயநிதி பேச்சால் அதிருப்தி

20 புரட்டாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 849


லோக்சபா தேர்தலின்போது, சனாதனத்திற்கு எதிராக உதயநிதி பேசிய விவகாரத்தில் அதிருப்தியில் உள்ள மம்தா உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரசை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணியில் இணைந்து, இரண்டு அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளது. இதனால் கோபமடைந்துள்ள தி.மு.க., தலைமை, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மம்தா பானர்ஜி

இதற்காக, தி.மு.க., எம்.பி., கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை சந்தித்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்த கனிமொழி, தி.மு.க.,வின் கூட்டணி திட்டத்தை விளக்கினார்.

மேலும், தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்கும் தி.மு.க.,வின் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த கூட்டணிக்கான தலைமை பொறுப்பை மம்தாவே ஏற்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில், கனிமொழியின் அழைப்பை மம்தா நிராகரித்து விட்டதாக தெரிகிறது. ''உங்களுக்காக காங்கிரசை விட்டு எங்களால் வர முடியாது. தேசிய அளவில் தி.மு.க.,வுக்கு என்ன ஆதரவு இருக்கிறது? உங்களுடையது மாநில பிரச்னை; அதை அங்கேயே தீர்த்துக் கொள்ளுங்கள்,'' என, அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில அரசியல் தலைவர்களையும் கனிமொழி சந்தித்தார். அவரது நெருங்கிய தோழியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவின் தலைவர் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சூலேவிடமும் ஆதரவு கோரப்பட்டது. ஆனால், ''நட்பு வேறு; அரசியல் வேறு. காங்கிரசை விட்டு எங்களால் வர முடியாது,'' என, அவரும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மும்பையில், சிவசேனா பிரிவு தலைவரான உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரையும் கனிமொழி சந்தித்து, தி.மு.க.,வின் கூட்டணி திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்து ஆதரவு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தலைவர், ''விஜய் மீதான கோபத்தில் நீங்கள் இத்தகைய திட்டத்தை வகுக்கிறீர்கள். இதில் எங்களை இழுக்காதீர்கள். காங்கிரசை கைவிட முடியாது,'' என, திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகிறது.

தவிர்த்தார்

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் பணிகளில் மும்முரமாக இருப்பதால், இப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச முடியாது எனக் கூறி, கனிமொழி சந்திப்பை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தவிர்த்து விட்டார்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது, ''சனாதனத்தை ஒழிப்போம்'' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசிய விவகாரத்தால், வட மாநில மக்கள் ஏற்கனவே தி.மு.க., மீது அதிருப்தியில் இருப்பதையும், கனிமொழியிடம் இந்த தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தி.மு.க.,வின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க அவர்கள் மறுப்பதற்கு, இந்த விவகாரமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும், முயற்சியை கைவிடாத தி.மு.க., தலைமை, அடுத்தகட்டமாக ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்குமாறு கனிமொழிக்கு அறிவுறுத்தியுள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 

தொடர்ந்து படிக்க