தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டு வர வேண்டும்! எல்.முருகன்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டு வர வேண்டும்! எல்.முருகன்

20 புரட்டாசி 2026 ஞாயிறு 06:47 | பார்வைகள் : 223


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 'நவோதயா' பள்ளிகளை த.வெ.க., அரசு கொண்டு வர வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் முருகன் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சார்பில், நாடு முழுதும் 45 இடங்களில் 'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன், 288 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின் அவர் கூறியதாவது:

இளைஞர்களின் திறன் மீது பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக, 2014ம் ஆண்டுக்கு முன் 400 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தற்போது 2.50 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பின்மை

இதுவரை 12 லட்சம் பேர் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். முன்பு வேலை தேடிய இளைஞர்கள், தற்போது வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறியுள்ளனர். இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளால், 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

சுறா திரைப்படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். இதன் மூலம், 2047ல் இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக உருவெடுக்கும்.

தமிழகத்தில் த.வெ.க., அரசு சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். முதல்வர் விஜய் 'சுறா' திரைப்படத்தில் மீனவராக நடித்துள்ளார்.

நவோதயா பள்ளிகள்

மீனவராக நடித்தால் மட்டும் போதாது; அவர்களின் வலியை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார்மயமாக்குவது தொடர்பாக, தமிழகத்திலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் த.வெ.க., அரசு 'நவோதயா' பள்ளிகளை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க