சாப்ட்வேர் சேவை ஏற்றுமதி ரூ.21 லட்சம் கோடியை எட்டியது; ரிசர்வ் வங்கி
20 புரட்டாசி 2026 ஞாயிறு 07:53 | பார்வைகள் : 235
கடந்த 2025–26 நிதியாண்டில், இந்தியாவின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2 சதவீதம் அதிகரித்து, 21.03 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் அமெரிக்கா தொடர்ந்து முக்கிய வாடிக்கையாளர் சந்தையாக விளங்குகிறது. மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 54.1 சதவீதமாகவும், அதன் மதிப்பு 11.37 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. 31.8 சதவீத பங்களிப்புடன் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இதில் பிரிட்டனின் பங்கு மட்டும் 15.4 சதவீதமாகும்.
இந்தியாவின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் கணினி சேவைகள் 69.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதி 13.96 லட்சம் கோடி ரூபாயாகவும், ஐ.டி. சார்பு துறை ஏற்றுமதி 6.46 லட்சம் கோடி ரூபாயாகவும், பி.பி.ஓ., சேவைகள் ஏற்றுமதி 5.32 லட்சம் கோடி ரூபாயாகவும், பொறியியல் சேவைகள் ஏற்றுமதி 1.14 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
ஏற்றுமதி பணப்பரிவர்த்தனைகளில் 72.6 சதவீத பில்கள் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யூரோ 9.6 சதவீதமும், இந்திய ரூபாய் 6.3 சதவீதமும் பங்களிக்கின்றன.
வெளிநாட்டு வணிக கிளைகளின் பங்களிப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மொத்த மென்பொருள் சேவை வர்த்தகம் 22.73 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



