ரூ.2,684 கோடி பண மோசடி: அனில் அம்பானி மீது வழக்கு
20 புரட்டாசி 2026 ஞாயிறு 08:56 | பார்வைகள் : 237
'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம் போலியான தகவல்களை அளித்து, எல்.ஐ.சி.,யிடம் இருந்து 2,684 கோடி ரூபாய் முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 'ரிலையன்ஸ்' முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
2012 முதல் 2018ம் ஆண்டு வரை, 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டது. இவற்றில் எல்.ஐ.சி., 3,900 கோடி ரூபாய் முதலீடு செய்தது. நிறுவனத்தின் பொது மற்றும் நிதி தேவைகளுக்காகவும், ஏற்கனவே உள்ள கடன்களை குறைக்கவும் இந்த முதலீடுகள் திரட்டப்பட்டன.
ஆனால், தவறான தகவல்களை வழங்கி முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடாக வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதாகவும் எல்.ஐ.சி., புகார் அளித்தது. இதனால், 2,684.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அதே அளவுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த மோசடியில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இதற்கு முன், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி., அளித்த புகார்களின் அடிப்படையில், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்', 'ரிலையன்ஸ் கேப்பிடல்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ., எட்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இவற்றில் ஆறு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் இருப்பதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் உள்ளன.



