அதிக கார்பன் உமிழ்வது வளர்ந்த நாடுகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
20 புரட்டாசி 2026 ஞாயிறு 10:07 | பார்வைகள் : 211
இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில், வளர்ந்த நாடுகளின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், கார்பன் உமிழ்வுக்கான பழி வளரும் நாடுகள் மீது தவறாக சுமத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.
‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கவியலின் எதிர்காலம்’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு டில்லியில் நேற்று தொடங்கியது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 17 நாடுகள் பங்கேற்றுள்ளன. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
கார்பன் வெளியேற்றத்துக்கான பொறுப்பு பெரும்பாலும் வளரும் நாடுகள் மீது தவறாக சுமத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் இன்றும் உலக சராசரியில் பாதியளவிற்கும் குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் இந்தியாவை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்த உண்மையை உலகளாவிய தளங்களில் இந்தியா வலுவாக எடுத்துரைத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய தரநிலைகளை உருவாக்க பிற நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகமானது மட்டுமல்லாமல், நிலையானதாகவும் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து துறைகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ‘சி.ஓ.பி.,-21’ உச்சி மாநாட்டில் இந்தியா அளித்த உறுதிமொழிகளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே நிறைவேற்றிய ஒரே ‘ஜி-20’ நாடாக இந்தியா உள்ளது.
புதைபடிவமற்ற எரிபொருள் பயன்பாடு, சூரிய ஆற்றல் திறன் மற்றும் கார்பன் உமிழ்வு கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் 2 கிகாவாட்டாக இருந்தது. தற்போது அது 160 கிகாவாட்டை கடந்துள்ளது.
**சூரிய மின்சக்தி**
‘பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்’ கீழ், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது பல நாடுகளில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அரசு 80 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின்சக்தி உற்பத்தி திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நீர்மின்சக்தி திறனும் உயர்ந்துள்ளது. அணுசக்தி உற்பத்தியிலும் நாடு வேகமாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது. இதுவே உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாகும். தூய எரிசக்தி போக்குவரத்து துறையில் இது புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் பயனளிக்கின்றன.
**தடைவிதிப்பு**
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வட்ட பொருளாதாரத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் பல நூற்றாண்டுகளாக உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்டி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
**தடையற்ற ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு**
‘ரோஜ்கார் மேளா’ நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பல்வேறு நாடுகளுடன் இந்தியா 40 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கின்றன. தொழில்முனைவோருக்கு புதிய கூட்டணிகள் மற்றும் புதிய சந்தைகளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ‘ஸ்டார்ட் அப்’ சூழலை இந்தியா கொண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களுக்குள் மட்டுமே செயல்படாமல், பிற நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளன.
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்காகும். இந்த பயணத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.



