இந்தியாவின் உதவியை நாட இலங்கை அரசுக்கு எதிர்க்கட்சி வலியுறுத்தல்
20 புரட்டாசி 2026 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 1024
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழரை மீட்பதற்கு, பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு இலங்கை அரசை அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழரான அனோஜன் சிவராசா, 9 மாதங்களுக்கு முன் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அங்கு சமூக வலைத்தளத்தில் மத நிந்தனை செய்ததாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் அனோஜன் சிவராசாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. பின்னர் இந்த தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் இலங்கையில் உள்ள சிவராசாவின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை இலங்கை வெளியுறவுத்துறை இதுவரை உறுதி செய்யவில்லை. சிவராசாவை எப்படியாவது மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இலங்கை அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, சவுதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை தமிழர் சிவராசாவை மீட்கும் விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடியின் உதவியை நாடுமாறு, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவிடம் எதிர்க்கட்சி எம்.பி., மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபியா மன்னர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடிக்கு நெருக்கமான உறவு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அவர் தலையிட்டால் சிவராசாவுக்கு மனிதாபிமான உதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



