தமிழக 5 மாத வருவாய் ரூ.1.18 லட்சம் கோடி; செலவு ரூ.1.38 லட்சம் கோடி

தமிழக 5 மாத வருவாய் ரூ.1.18 லட்சம் கோடி; செலவு ரூ.1.38 லட்சம் கோடி

20 புரட்டாசி 2026 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 755


நடப்பு 2026–27ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், தமிழக அரசின் வருவாய் 1 லட்சத்து 17,791 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசின் செலவு 1 லட்சத்து 38,140 கோடி ரூபாயாக இருந்ததால், 20,349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு மாநில ஜி.எஸ்.டி., முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், மாநில ஆயத்தீர்வை, மத்திய அரசு வசூலிக்கும் வரியில் கிடைக்கும் பங்கு உள்ளிட்டவற்றின் மூலம் வரி வருவாய் கிடைக்கிறது. சேவை கட்டணங்கள், அபராதம் உள்ளிட்டவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைக்கிறது.

அதேபோல், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்காக அரசு செலவுகளை மேற்கொள்கிறது.

நடப்பு 2026–27ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், வரிகள், வரி அல்லாத வருவாய் மற்றும் மத்திய அரசின் மானியங்கள் மூலம் தமிழக அரசுக்கு 1 லட்சத்து 17,791 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதே காலத்தில் அரசின் மொத்த செலவு 1 லட்சத்து 38,140 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதன் காரணமாக 20,349 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டி 25,991 கோடி ரூபாயாகவும், ஓய்வூதிய செலவு 21,008 கோடி ரூபாயாகவும் அதிகமாக உள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசு பெற்ற கடன் 30,021 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மாதத்தில் அரசு எந்தக் கடனும் வாங்கவில்லை என தெரியவந்துள்ளது.

**வருவாய் எவ்வளவு? — ரூபாய் கோடியில்**

* மாநில சரக்கு மற்றும் சேவை வரி — 34,144.06
* முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் — 10,493.30
* நிலம் விற்பனை — 57.16
* வர்த்தகம் மீதான வரி — 28,164.79
* மாநில ஆயத்தீர்வை — 5,214
* மத்திய அரசின் வரிப் பங்கு — 24,188
* இதர வரிகள் மற்றும் தீர்வைகள் — 6,843
* வரி அல்லாத வருவாய் — 5,149
* மத்திய அரசின் மானியங்கள் — 3,537
 

தொடர்ந்து படிக்க