இலங்கையை சர்வதேச ரி20 தொடரில் 3 - 0 என முழுமையாக துவம்சம் செய்தது இங்கிலாந்து
20 புரட்டாசி 2026 ஞாயிறு 15:49 | பார்வைகள் : 344
இலங்கைக்கு எதிராக மென்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (19) இரவு நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முழுமையாக துவம்செய்தது.
இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் இன்னும் நிறைய முன்னேறவேண்டியுள்ளதெனத் தெரிவித்த அணித் தலைவர் சரித் அசலன்க, நேற்றைய தோல்விக்குப் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என கூறி சமாளித்தார்.
கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பெத்தும் நிஸ்ஸன்க (36), கமிந்து மெண்டிஸ் (35) ஆகிய இருவரே துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் சொனி பேக்கர் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வெறும் 9.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஸ் பட்லர் 32 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களைக் குவித்தார். ஹெரி ப்றூக் 33 ஓட்டங்களைப் பெற்றார்.



