பிரான்ஸ்–ஈரான் பதற்றம் அதிகரிப்பு: பிரெஞ்சு தூதரகத்துடன் தொடர்புடைய கலாசார மையம் மூடல்!!
20 புரட்டாசி 2026 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 2085
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பிரெஞ்சு தூதரகத்துடன் தொடர்புடைய பிரெஞ்சு மொழி மையம் (CLF) மூடப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது. அந்த மையம் “சட்டவிரோத நடவடிக்கைகளில்” ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Mizan தெரிவித்துள்ளது. எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தெஹ்ரானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இந்த மையம், ஈரானில் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. பிரெஞ்சு மொழி வகுப்புகள், தேர்வுகள் மற்றும் நூலக வசதிகளை வழங்கி வந்த CLF, தெஹ்ரான் வழக்கறிஞர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மூடப்பட்டதாக ஈரான் நீதித்துறை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு தூதரகம் இதுவரை இந்த அறிவிப்பு குறித்து உடனடியாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
பிரான்ஸ்–ஈரான் உறவுகள் ஏற்கனவே பதற்றமான நிலையில் உள்ள சூழலில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் பணியாற்றிய இரண்டு பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் தொடர்பான சம்பவத்துக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. அவர்கள் பல மணி நேரம் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சர் Jean-Noël Barrot குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஈரான், பிரான்ஸின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தனது உள்நாட்டு விவகாரங்களில் “தலையீடு” செய்வதாக பிரான்ஸை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



