காவல்துறைக்கு கூடுதல் ஆயுத அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு எதிராக மக்கள் பேரணி!!

காவல்துறைக்கு கூடுதல் ஆயுத அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு எதிராக மக்கள் பேரணி!!

20 புரட்டாசி 2026 ஞாயிறு 22:40 | பார்வைகள் : 1549


காவல்துறையினரின் ஆயுதப் பயன்பாட்டைச் சட்டரீதியாகக் கருதும் விதிகளை மாற்றும் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். குடியரசுக் கட்சியின் (République) சட்டத்தின் கீழ் காவல்துறைக்கு அதிகமான அதிகாரம் வழங்கப்படுவதால், அது “கொல்லும் உரிமம்” போன்ற நிலையை உருவாக்கக்கூடும் என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சட்ட முன்மொழிவு, காவல்துறை மற்றும் ஜொந்தாமினர் அதிகாரிகள் தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது, அவர்கள் சட்டத்திற்கு இணங்கியே செயல்பட்டதாக ஆரம்பத்திலேயே கருதப்படும் வகையில் விதியை மாற்றுகிறது. இந்த மசோதா கடந்த ஜூலை மாதம் 7ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக செனட் சபையில் பரிசீலிக்கப்பட உள்ளது. இதற்கு எதிராக ஏற்கனவே சுமார் 730 000 கையெழுத்துகள் திரட்டப்பட்ட மனு நாடாளுமன்ற சட்டக்குழுவால் ஜூலை மாதத்தில் முடித்து வைக்கப்பட்டது.

பரிஸில் நடைபெற்ற பேரணியில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், Amnesty International, Ligue des droits de l’Homme மற்றும் பிற அமைப்புகள் கலந்து கொண்டன. இந்த இயக்கம் பரிஸைத் தாண்டியும் பரவியது; Marseille, Lyon, மற்றும் Lille உள்ளிட்ட நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பரிஸில் காவல்துறை கணக்கின்படி 21,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்; Marseille நகரில் 4,500 பேரும், Lyon நகரில் சுமார் 4,500 பேரும், Lille நகரில் 3,700 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் சுமார் நூறு பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. சனிக்கிழமை நடைபெற்ற சுமார் 30 போராட்டங்களில் காவல்துறை கணக்கின்படி 13,500 பேர் பங்கேற்றனர். Rennes நகரில் போராட்டத்தின் போது காவல்துறையினர் மீது பொருட்கள் வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று காவலர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், உள்துறை அமைச்சர் Laurent Nuñez , போராட்டங்களின்போது சிறப்பு விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்புப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படிக்க