வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ! முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
21 புரட்டாசி 2026 திங்கள் 05:45 | பார்வைகள் : 210
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர்.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், நீர்நிலைகளைத் தூர்வாருதல், பேரிடர் ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்களைத் தயார்நிலையில் வைத்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்கூட்டியே மீட்புப் படையினரைப் பணியமர்த்துதல், நிவாரண மையங்களில் மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஆகாயத் தாமரைச் செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை விரைவுபடுத்துதல், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கோபுரங்களை உடனடியாகச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் முதல்வர் விஜய் உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட உள்ளது.



