தமிழகம் முழுவதும் விநாயகர் ஊர்வலம்: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
21 புரட்டாசி 2026 திங்கள் 06:55 | பார்வைகள் : 196
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நிறுவப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 14-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
பூஜைகள் நிறைவடைந்ததும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலீசாரின் அனுமதியுடன் பொது இடங்களில் 37 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இவற்றில் சில சிலைகள் ஏற்கனவே கரைக்கப்பட்டுவிட்டன.
பெரும்பாலான பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அந்தந்த பகுதிகளில் காவல்துறை அனுமதித்த பாதைகள் வழியாக ஊர்வலங்கள் நடைபெற்றன. அனுமதிக்கப்பட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் சிலைகள் கரைப்பு
சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சிலைகள் கரைப்பதற்காக அப்பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலங்கள் கடற்கரை பகுதிகளை நெருங்கியதும், கிரேன்கள் மற்றும் டிராலிகள் மூலம் சிலைகள் கடற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மேலும், கடற்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் சிலைகள் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.



