இந்தியாவிலேயே சிப் தயாரிப்பு: அஸ்வினி வைஷ்ணவ்
21 புரட்டாசி 2026 திங்கள் 08:00 | பார்வைகள் : 223
அடுத்த 5 ஆண்டுகளில் கார்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கான சிப்களை இந்தியாவிலேயே தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
**இதுகுறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் கூறியதாவது:**
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கார்கள், மின் அமைப்புகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிப்களை இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்ய வேண்டும். செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பு மற்றும் வடிவமைப்புத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
இணையவழித் தாக்குதல்கள் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்து துறை சார்ந்த நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்ள சில சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை அச்சுறுத்தலாகக் கருதக்கூடும் என்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
செமிகண்டக்டர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், உள்நாட்டுச் சூழலமைப்பை விரிவுபடுத்தவும், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும் அரசு ரூ.1.27 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. சிப் தயாரிப்பு மற்றும் பரிசோதனை மட்டுமின்றி, வடிவமைப்பு, உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டமைப்பையும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.



