இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக பாணி: இளைஞர்களை கவர கட்சிகள் முயற்சி

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக பாணி: இளைஞர்களை கவர கட்சிகள் முயற்சி

21 புரட்டாசி 2026 திங்கள் 09:03 | பார்வைகள் : 297


தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார உத்திகளை மற்ற அரசியல் கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்ததில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருந்தது. தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களிலும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் இதே உத்தியை கையாளத் தொடங்கியுள்ளனர்.

இதற்காக தனிப்பட்ட குழுக்கள், குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளுக்கான பிரத்யேக சமூக வலைதளப் பக்கங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் 'வார் ரூம்' எனப்படும் தேர்தல் வியூக மையங்கள் அமைக்கப்பட்டு, நான்கு வார கால பிரசாரத்துக்கு கட்சிகள் தயாராகியுள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் இளைஞர்களாக இருப்பதால், அவர்களை ஈர்க்கும் முயற்சியில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைவதில் ஏற்பட்ட பின்னடைவு தங்கள் வெற்றியைப் பாதித்ததாக திமுக ஒப்புக்கொண்டிருந்தது. இதையடுத்து, தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. குறிப்பாக, இந்த வீடியோக்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோரின் பேச்சுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் இன்ஸ்டாகிராமில் 100 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படத்தின் பின்னணி இசையுடன் கூடிய மெதுவான வேகத்திலான பிரசார வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. இளைஞர்களிடம் ஆதரவு கோருவது மற்றும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்த கட்சியின் விமர்சனங்களை முன்வைப்பது போன்ற வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அதிமுகவின் கனிதா சம்பத்தும் டிஜிட்டல் பிரசாரத்தில் இணைந்துள்ளார். அவரது புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100க்கும் குறைவான பின்தொடர்பவர்கள் மட்டுமே இருந்தாலும், அதிக பாலோவர்களைக் கொண்ட உள்ளூர் சமூக வலைதள அக்கவுண்டுகள் மூலம் அவரது பிரசாரம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததற்காக மரகதம் குமரவேலை விமர்சிக்கும் வயதான பெண்களின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள மரகதம் குமரவேல், முன்பைவிட சமூக ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறார். அவரது பல வீடியோக்களை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அந்த வீடியோக்கள் அதிக அளவிலான 'லைக்'குகளையும் பெற்றுள்ளன.

தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் பி. சத்தியபாமா இதற்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவர் கட்சி மாறியதன் மூலம் அதிமுகவுக்கு 'துரோகம்' இழைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரது சமூக ஊடகப் பதிவுகள் பதிலளிக்கின்றன.

அதிமுக வேட்பாளர் கே. பானுமதியும் கட்சி மாறியவர்தான் என்று கூறும் வீடியோக்களும் பரப்பப்பட்டு வருகின்றன. தவெக கட்சியின் 'ரீல்ஸ்' வீடியோக்களில் விஜய்யின் திரைப்படப் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் அவை அதிகம் வைரலாகி வருகின்றன.

திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவைப் பொறுத்தவரை, முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சாமிநாதன் சமூக ஊடகப் பிரசாரத்தை முன்னின்று நடத்துகிறார்.

பிரபலமான திரைப்படப் பாடல்களை பின்னணியாகக் கொண்ட 'ஸ்லோ-மோஷன்' பிரசார வீடியோக்களை சுகன்யா வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் தனது விவசாயப் பின்னணி மற்றும் எளிமையான வாழ்க்கை முறையை முன்னிலைப்படுத்தும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

**இளைஞர்களே அதிகம்; வாக்காளர்கள் எண்ணிக்கை!**

**தாராபுரம் தொகுதி:**

18 வயது முதல் 29 வயது: 38,786

30 வயது முதல் 39 வயது: 37,924

மொத்த வாக்காளர்கள்: 2,22,398

**மதுராந்தகம் தொகுதி:**

18 வயது முதல் 29 வயது: 45,948

30 வயது முதல் 39 வயது: 46,619

மொத்த வாக்காளர்கள்: 2,12,639
 

தொடர்ந்து படிக்க