லண்டனுக்கு பதில் மதுரை, கோவை செல்லலாம்: அண்ணாமலை
21 புரட்டாசி 2026 திங்கள் 10:08 | பார்வைகள் : 683
மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில் வைகை நதியைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பங்கேற்றவர்களுக்கு 'சிற்பி விருது' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விருதுகளை அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
**அவர் பேசியதாவது:**
வைகை நதியில் 7 வாரங்களில் 33 ஏக்கர் பரப்பளவில் 163 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அரசியல் மாற்றம் என்பது இதுபோன்ற களப்பணிகள் மூலமாகவே நடைபெற வேண்டும்.
சட்டசபையில் த.வெ.க., எம்.எல்.ஏ., கருப்பையா, 'ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது' என்று கூறியுள்ளார். ஆனால், த.வெ.க., தேர்தல் அறிக்கையில் 'ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக மாற்றுவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக அனுமதி சீட்டுகளை சினிமா டிக்கெட்டுகளை 'பிளாக்'கில் விற்பது போல் த.வெ.க.,வினர் விற்றனர். சட்டசபையில் சபாநாயகர் முதல் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் தான் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை போட்டி போட்டு வெளிப்படுத்துகின்றனர்.
முதல்வர் விஜய் லண்டன் சென்றிருக்க வேண்டியதில்லை. இந்தியாவை விட குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடாக பிரிட்டன் உள்ளது. இந்திய நிறுவனங்களே அங்கு முதலீடு செய்து வருகின்றன.
எனவே, சென்னையில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்வதைவிட, மதுரை அல்லது கோவைக்கு முதல்வர் சென்று தமிழக தொழிலதிபர்களின் தொழில் விரிவாக்கத்துக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
**உறுப்பினர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது**
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி கடந்த ஜூன் 5ம் தேதி 'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கினார். அமைப்பு தொடங்கிய முதல் நாளிலேயே 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
தொடர்ந்து, போதைப்பொருள், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.



