சட்டசபை நேரடி ஒளிபரப்பில் அக்கறையாக இருக்கிறேன்: சபாநாயகர்

சட்டசபை நேரடி ஒளிபரப்பில் அக்கறையாக இருக்கிறேன்: சபாநாயகர்

21 புரட்டாசி 2026 திங்கள் 11:12 | பார்வைகள் : 318


“நாங்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் எப்படி பேசுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என மக்கள் என்னிடம் கேட்கின்றனர்,” என்று சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:

செவிலியர் துறையில் ஆண்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு அதுபோன்ற பதவி உயர்வு கிடைப்பதில்லை. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, மக்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். உறுப்பினர்கள் பேசியதில் தவறான வார்த்தைகள் மற்றும் தவறான கருத்துகள் இடம்பெற்றிருந்தால், அவை சட்டசபை குறிப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக கூறுகிறீர்கள். அவற்றை சபை குறிப்புகளில் இருந்து நீக்குங்கள்; ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் பேசியதை நாங்கள் பார்க்க வேண்டும். அந்தப் பேச்சுகளை நேரடி ஒளிபரப்பில் இருந்து நீக்கக்கூடாது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் சட்டசபையில் எவ்வாறு பேசுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சட்டசபையில் குறிப்பிட்ட வகையில் பேசக்கூடாது என்பது தெரிந்தும் ஏன் அவ்வாறு பேச வேண்டும்? தகுதியான கருத்துகளை ஏன் பேசக்கூடாது? என மக்கள் பல்வேறு கேள்விகளை என்னிடம் முன்வைக்கின்றனர்.

சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பதில் நான் அக்கறையுடன் இருக்கிறேன்.

இவ்வாறு சபாநாயகர் பிரபாகர் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க