ரூ.299 கோடி திட்டங்களுக்கு மூடுவிழா: சி.எம்.டி.ஏ., முடிவு
21 புரட்டாசி 2026 திங்கள் 12:15 | பார்வைகள் : 442
தி.மு.க., ஆட்சிக்காலத்தில் 2025-26ம் நிதியாண்டில் ரூ.299 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட 15 திட்டங்களை சி.எம்.டி.ஏ., கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்போதைய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தொடங்கப்பட்ட காலம் முதல் நகர்ப்புற திட்டமிடல், கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சி.எம்.டி.ஏ., தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டார்.
இதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து பல்வேறு பரிந்துரைகள் பெறப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளையும் சி.எம்.டி.ஏ., நிதியில் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, சி.எம்.டி.ஏ.,வின் இருப்பில் இருந்த ரூ.3,900 கோடி காலியானது.
புதிதாக கட்டட அனுமதி வழங்குவதன் மூலம் சி.எம்.டி.ஏ.,வுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு 2025-26ம் ஆண்டில் பல்வேறு புதிய கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
சென்னையில் பள்ளி, கல்லுாரிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுதல், முதல்வர் படைப்பகங்கள் அமைத்தல், பொது நூலகம் அமைத்தல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நடை மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.299 கோடி மதிப்பீட்டில் 15 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. சில திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இத்திட்டங்களின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களுக்கே நிதி பற்றாக்குறை நிலவும் நிலையில், புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது.
**இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:**
சி.எம்.டி.ஏ.,வில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ள திட்டங்களுக்கே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க நிதி இல்லை.
இந்த நிலையில், 2025-26ம் நிதியாண்டில் ரூ.299 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இத்திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பது சமீபத்தில் இத்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற குழும கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த திட்டங்கள் கைவிடப்படும் என்றே தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
**திட்டங்கள் விவரம்**
நிதியின்றி கைவிடப்படும் நிலையில் உள்ள திட்டங்களில் சில:
* பாரதி மகளிர் கல்லுாரியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டுப் பணி.
* சென்னையில் 9 அரசு பள்ளிகளை ரூ.25 கோடியில் மேம்படுத்துதல்.
* சென்னையில் 15 இடங்களில் ரூ.40 கோடியில் முதல்வர் படைப்பகங்கள் அமைத்தல்.
* பிராட்வே பகுதியில் ரூ.30 கோடியில் பொது நூலகம் அமைத்தல்.
* குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்.
இந்த திட்டங்களை சி.எம்.டி.ஏ., கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



