சாண எரிவாயு தயாரிப்போருக்கு மத்திய அரசு சலுகை!
21 புரட்டாசி 2026 திங்கள் 14:19 | பார்வைகள் : 1009
'கோபர்தன்' எனப்படும் இயற்கை சாண எரிவாயு தயாரிப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் எரிவாயுவில், 100 சதவீதம் வரை விற்பனை உத்தரவாதத்தை பெற முடியும். இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
கடந்த 2018ல், 'துாய்மை இந்தியா' இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'கோபர்தன்' எனப்படும் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டம் தொடங்கப்பட்டது.
மாட்டு சாணம், வேளாண் பயிர்க் கழிவுகள், சமையலறை மற்றும் சந்தைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து, அவற்றை சி.பி.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட சாண எரிவாயுவாகவும், இயற்கை உரமாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
சி.பி.ஜி., உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், 23 ஆயிரத்து 731 கோடி ரூபாய் மதிப்பிலான கோபர்தன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
### நிதியுதவி
உள்நாட்டு சி.பி.ஜி., உற்பத்தியை 10 மடங்கு அதிகரிப்பதுடன், இத்துறையில் அதிக அளவில் தனியார் முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கோபர்தன் திட்டத்துக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை செயல்படுத்தும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்ட விதிமுறைகள் வருமாறு:
கோபர்தன் திட்டம், நடப்பு நிதியாண்டு முதல் 2035 - 36ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், புதிய ஆலை அமைக்கும் போது, அதன் உற்பத்தித் திறனைப் பொறுத்து, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு டன்னுக்கு, 2 கோடி ரூபாய் வரை அரசு நேரடி மூலதன நிதியுதவி வழங்கும்.
இந்த மானியம் ஆலை அமைப்பதற்கு மட்டுமின்றி, கிராமங்களில் இருந்து சாணங்களை ஏற்றி வரும் டிராக்டர்கள், கழிவுகளை கொட்டும் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்.
புதிய விதிகளின்படி, சி.பி.ஜி.,யின் 100 சதவீதம் வரை உறுதியான கொள்முதலை, தகுதியுள்ள உற்பத்தியாளர்கள் தேர்வு செய்யலாம்.
இதன்படி, உற்பத்தியாகும் எரிவாயுவை அரசே முழுமையாக வாங்கிக் கொள்ளும். உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் எரிவாயுவை, நகர எரிவாயு வினியோக நிறுவனங்கள் கட்டாயம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இதற்கான ஒப்பந்தத்தை உரிய காலத்துக்குள் மேற்கொள்ளாத நகர எரிவாயு வினியோக நிறுவனங்களுக்கு எதிராக, எரிவாயு ஒதுக்கீட்டை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வாகனங்களில் பயன்படுத்தப்படும் சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில், சி.பி.ஜி.,யை கட்டாயம் சேர்க்க வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 4 சதவீதமாகவும், 2028 - 29ல் 5 சதவீதமாகவும் சி.பி.ஜி., சேர்க்கப்பட வேண்டும்.
உற்பத்தியாளர்களுக்கு நீண்ட கால வருவாய் பாதுகாப்பை வழங்கும் வகையில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட், அதாவது மணிக்கு 294 கிலோவாட்டிற்கு, 2,110 ரூபாய் என்ற நிலையான கொள்முதல் விலை சி.பி.ஜி.,க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
### தவணை முறை
இதன்படி, 95 சதவீத மீத்தேன் உள்ளடக்கத்தின் அடிப்படையில், கிலோவுக்கு 98 ரூபாய் வழங்கப்படும். இந்த விலை அடுத்த 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2036 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
ஒவ்வொரு சி.பி.ஜி., திட்டத்துக்கும் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை மூலதன உதவி வழங்கப்படும். புதிய ஆலைகளுக்கு, ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு டன்னுக்கு 1.25 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி தவணை முறையில் வழங்கப்படும்.
சி.பி.ஜி.,யை கொள்முதல் செய்து ஒருங்கிணைக்கும் ஆப்பரேட்டராக, மத்திய அரசுக்கு சொந்தமான 'கெயில்' நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஜி., திட்டங்களுக்கு நிதி கிடைப்பதை எளிதாக்கும் வகையில், கடன் உத்தரவாத ஆதரவு மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்வதற்கான குழாய் கட்டமைப்பு வசதிகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
### இரட்டை பலன்!
மாட்டு சாணம், பயிர்க் கழிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, சி.பி.ஜி., ஆலையில் உள்ள பிரமாண்ட செரிப்பான் தொட்டியில் கொட்டப்படுகின்றன. இவற்றை காற்றில்லா முறையில் நொதிக்க வைப்பதன் வாயிலாக, துாய்மையான எரிவாயுவும், உயர்தர உரமும் கிடைக்கின்றன.
துாய்மையான எரிவாயுவை சுத்திகரித்து, சிலிண்டர்களில் அடைத்து, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக விற்பனை செய்யலாம். கிடைக்கும் உரத்தை விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம்.



