ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன்

ஆசிய போட்டியில் இரட்டை பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன்

21 புரட்டாசி 2026 திங்கள் 13:30 | பார்வைகள் : 255


ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாளறிவன் இரட்டை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், குழுப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய அணி 1898 புள்ளிகளைப் பெற்று, 2வது இடத்தைக் கைப்பற்றி வெள்ளி வென்றது.

இது, இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் ஆகும்.

சீன அணி 1904.2 புள்ளிகள் பெற்று தங்கமும், ஜப்பான் அணி 1897.1 புள்ளிகளைப் பெற்று வெண்கலமும் வென்றது.

இதே போல், துப்பாக்கி சுடுதல் தனிநபர் பிரிவிலும், இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகளை பெற்று 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளுடன் தங்கமும், கொரியாவின் பேன் ஹியோஜின் 230.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்த 27 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இளவேனில் வாளறிவன், முன்னதாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டு இந்திய அரசு அர்ச்சுனா விருது வழங்கி இவரை கௌரவித்தது.

இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்ற இளவேனில் வாளறிவனுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து படிக்க