லொறி மோதியதில் 57 வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழப்பு!!
21 புரட்டாசி 2026 திங்கள் 16:05 | பார்வைகள் : 1031
பரிஸ் நகரில் Concorde பகுதியில் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 57 வயதுடைய பெண் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை 9.26 மணியளவில் Place de la Concorde பகுதியில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது கனரக லொறி மோதியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து Concorde பாலம் திங்கட்கிழமை காலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
இந்த விபத்து லொறியின் “angle mort” எனப்படும் சாரதியின் பார்வைக்கு மறைந்த பகுதி காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியிடம் மது மற்றும் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரு பரிசோதனைகளின் முடிவுகளும் எதிர்மறையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Paris நகரில் மிதிவண்டி ஓட்டுநர்கள் உயிரிழக்கும் விபத்துகளில் கனரக வாகனங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள் தொடர்புபடுவது குறித்து முன்னரும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வீதி விபத்துகளில் 3,263 பேர் உயிரிழந்ததாக தேசிய வீதி பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 235 பேர் மிதிவண்டி ஓட்டுநர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



