சூரியை மக்கள் நாயகனாக ஏற்றுக்கொண்டது எப்படி..?
21 புரட்டாசி 2026 திங்கள் 16:45 | பார்வைகள் : 3586
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக பரிணமித்து ரூ.100 கோடி வசூலை ஈட்டிய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூரி. ஒரு காலத்தில் நகைச்சுவைக்காக ரசிக்கப்பட்டவர், பின்னாளில் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இன்று அவர் நாயகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
சினிமா என்ட்ரி: சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோருக்கு தனியார் தொலைக்காட்சி பின்னணி இருந்தது. சின்னத்திரையிலிருந்து அவர்கள் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்கள். அதை சரியாக பயன்படுத்தி முன்னேறினர். ‘புதுப்பேட்டை’ படத்தில் ரவுடி கும்பலில் ஒருவராக பின்னால் நின்றிருந்தார் விஜய் சேதுபதி. அவரைப் போல தான் சூரியும். ‘சங்கமம்’ படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூரியின் வளர்ச்சி அபரிவிதமானது.
1998-ம் ஆண்டு வெளியான ‘மறுமலர்ச்சி’, 1999-ல் வெளியான ‘சங்கமம்’, ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘கண்ணன் வருவான்’, ‘ரெட்’, ‘வின்னர்’, ‘வர்ணஜாலம்’ என பல படங்களில் அடையாளமே தெரியாத பத்தோடு பதினோன்றாவது நபராக நடித்திருந்தார் சூரி. அஜித்தின் ‘ஜி’ படத்தில் கல்லூரி மாணவர் கதாப்பாத்திரம் கிடைத்தது. அதன் பிறகு சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்
32 வயதில் அவரது திரைவாழ்வில் ‘வெண்ணிலா கபடி குழு’ வந்து சேர்ந்தது. கபடியை மையமாக வைத்து உருவான படத்தில் விஷ்ணு விஷால் ஸ்கோர் செய்தார். அதில் ஸ்கோர் செய்ய சூரிக்கும் ஒரு இடம் இருந்தது. பரோட்டோ நகைச்சுவையில் நடிக்க வேண்டிய நடிகர் வர தாமதம் என்பதால் சூரியை நடிக்க வைத்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த காமெடி பெரும் ஹிட்டடித்தது. அன்று முதல் ‘பரோட்டா’ சூரி என அடையாளம் பெற்றார்.
அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டாப் கியரில் பயணித்தவருக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நகைச்சுவை நடிகருக்கான முழு அங்கீகாரத்தையும் கொடுத்தது. முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், சிவகார்த்திகேயனுடனான அவரது காம்போவுக்கு தனி ரசிகர்கள் இருந்தனர்.
ட்ரால்களுக்கு ஆளான காமெடி: ஒரு கட்டத்தில் சூரியின் காமெடி என புகழ்ந்தவர்கள், அதன் பிறகு ஒரே மாதிரியான நகைச்சுவையால், ‘இது சூரி காமெடி’ என சமூக வலைதளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர். ஆங்கிலத்தை தவறாக உச்சரிப்பதை நகைச்சுவையாக்கியது ரசிகர்களுக்கு சோர்வை கொடுத்தது. ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரியின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ‘டான்’ படத்தில் கொரியன் மொழியை மையமாக வைத்து அவர் செய்த நகைச்சுவைக்கு ரீச் ஆனது.
சூரியின் உடல்மொழி, கிராமத்து இளைஞனின் சாயல், டைமிங் ஆகியவை ஆரம்பத்தில் அவரது நகைச்சுவைக்கு அச்சாணியிட்டன. ஆனால், ஒரு கட்டத்தில் அவை ஆட்டம் கண்டன. ஒரேமாதிரியான உடல்மொழியையும், காமெடியையும், ஆங்கிலத்தை தப்பாக உச்சரிப்பதை நகைச்சுவையாக நிறுவ முயன்றதையும் மக்கள் நிராகரித்தனர். ‘எக்ஸ்பைர்’ காமெடி என முத்திரையிட்டனர்.
இதை அப்படியே தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்திருந்தால் காணாமல் போயிருப்பார் சூரி. ஆனால், சரியான நேரத்தில் தன்னை நோக்கி வந்த வாய்ப்பை பற்றிக்கொண்டார். ‘விடுதலை’ படத்தில் தன்னை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை தாண்டி, இனியும் காமெடியை நம்ப முடியாது என நினைத்து பாய்ச்சலை நிகழ்த்தினார். ‘விடுதலை’ ஹிட்டானது. மக்கள் கதையின் நாயகனாக ஏற்றுக்கொண்டார்கள். அதேபோல கதை தேர்வுகளிலும், கவனம் செலுத்தியதன் பயனாக ‘மண்டாடி’ போன்ற படத்தில் நடித்து ரூ.100 கோடியை வசூலித்து சாதித்துள்ளார்.
சூரியை பொறுத்தவரை அவர் திரை இருப்பு என்பது நாயகர்களுக்கு அடுத்தபடியே இருக்கும். நாயகர்களை தாண்டி அவர் நகைச்சுவையால் ஸ்கோர் செய்த இடம் குறைவு. அதனால், முழுமையான நகைச்சுவை நடிகராக அவர் மக்கள் மனதில் இடம்பெறவில்லை என்றே கூறலாம். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், ஆகியோர் நாயகர்களை தாண்டி ஸ்கோர் செய்யும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், சூரிக்கு அப்படி அமையாதது ஒரு வகையில் நல்லாதாகவே அமைந்தது.
இதனால், அவரை முழுமையான காமெடி நடிகராக மக்களிடையே பதியவில்லை. அதனால், இன்று அவர் கதையின் நாயகனாக நடிக்கும்போது, காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கிறார் என மக்களால் பார்க்க முடியவில்லை. மாறாக, துணை நடிகர் சூரி, நாயகனாகியிருக்கிறார் என்பது அனிச்சையாக பார்வையாளர்களிடம் தோன்றியது. அதற்கு சூரி தேர்ந்தெடுத்த கதைக்களங்களும், கதாபாத்திரமும், தனது தோற்றத்தை அவர் மாற்றிக்கொண்ட விதமும் கைகொடுத்ததை மறுக்க முடியாது!



