திரிணமுல் விவகாரம் : மம்தா மனுவை அவசரமாக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
22 புரட்டாசி 2026 செவ்வாய் 05:58 | பார்வைகள் : 297
திரிணமுல் காங்., கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டது.
அக்கட்சியின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏ.,க்களில், 60 பேர், மம்தாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர் தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், திரிணமுல் காங்கிரசின் பெயர் மற்றும் 'புற்கள், இரு பூக்கள்' சின்னத்தை பயன்படுத்தும் உரிமை கோரி, மம்தா தரப்பும், ரிதபிரதா தரப்பும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.
இரு தரப்பினரும் இடைத்தேர்தலில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தேர்தல் கமிஷன், தேர்தலில் போட்டியிட இரு தரப்புக்கும் புதிய பெயர் மற்றும் சின்னங்களை ஒதுக்கியது.
இதனால் அதிருப்தியடைந்த மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்., பெயர் மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில், மம்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிட்டார்.
அப்போது அவர், ''இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், திரிணமுல் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது ஏன்? இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு, ''இப்போதே வாதங்களை முன்வைக்க வேண்டாம்,'' என அறிவுறுத்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை அவசரமாக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தார்.



